பச்சைக்கிளி விற்பனை செய்த திருச்சி பாலக்கரை பெண் சென்னையில் பிடிபட்டார்

Posted by Unknown on 3:30 AM with No comments
பச்சைக்கிளி விற்பனை செய்த திருச்சி பாலக்கரை பெண் சென்னையில் பிடிபட்டார்

தடையை மீறி விற்பனை செய்ய முயன்ற திருச்சி பாலக்கரையை சேர்ந்த பெண் பிடிபட்டார். அவரிடம் அதிகாரிகள் 14 பச்சைக்கிளிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

பாவம் பச்சைக்கிளி

பச்சைக்கிளிகளை வீட்டில் வைத்து வளர்க்கவோ அல்லது ஜோசியத்துக்கு பயன்படுத்தவோ கூடாது என்ற தடைச்சட்டம் உள்ளது. இதனை மீறி கிளிகளை வளர்த்து வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களின் மீது மதராஸ் கால்நடை துயர் தடுப்புக்கழகம் (எஸ்.பி.சி.ஏ.) நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் எழும்பூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் வண்டலூர் அல்லது கிண்டி பூங்காவில் சென்று விடப்படுகின்றன. கிளி ஜோசியக்காரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னை மதுரவாயல் மீன் சந்தையில் பச்சைக்கிளிகள் மறைமுகமாக விற்பனை செய்துவருவதாக எஸ்.பி.சி.ஏ.வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி.சி.ஏ. கவுரவ செயலாளர் தி.தியாகராஜன் உத்தரவின்பேரில், துணை ஆய்வாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சந்தைக்குச்சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பச்சைக்கிளிகளை விற்பனை செய்துகொண்டிருந்த திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்ற பெண்ணை அதிகாரிகள் பிடித்தனர். இந்தக்கிளிகளை ஜோடி ரூ.1000க்கு விற்பனை செய்ததாக அதிகாரிகளிடம் அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 14 பச்சைக்கிளிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இதுகுறித்து எஸ்.பி.சி.ஏ. கவுரவ செயலாளர் தி.தியாகராஜன் கூறுகையில், ‘‘பச்சைக்கிளிகளை வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். தொடர்ந்து நாங்கள் கிளி ஜோசியக்காரர்களை எச்சரித்து வருகிறோம். கைப்பற்றப்பட்ட இந்த கிளிகளை கோர்ட்டில் ஒப்படைக்கப்போகிறோம் என்றார்.